|
|
 |
 |
Tuesday, September 11, 2007
Sardinia(Italy) - Sept 02-09, 2007
விடுமுறைக்காக நான் எங்காவது செல்லும் போது அதிலும் குறிப்பாக புதிய நாடு அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் போது மறக்காமல் குறிப்புக்களைச் சேகரிப்பது வழக்கம். புகைப்படங்கள் மற்றும் #39;ளிப்படங்கள் சேகரித்தலும் இதில் அடங்கும். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் குறிப்புக்களை நோக்கும் போது விடுமுறையின் இனிய நினைவுகள் மனதில் நிழலாடுவது #39;ரு தனி சுகம்.
அந்த வகையில் கடந்த வாரம் 7 நாட்கள் கிடைத்த விடுமுறையில் இத்தாலியின் தீவுகளில் #39;ன்றான சார்டீனியாவிற்குச் சென்றிருந்தேன். இந்த அழகிய தீவின் சில புகைப்படங்களும் தகவல்களும் இதோ.
முதலில் இந்த தீவைப்பற்றிய சிறு குறிப்பு:
தீவின் பெயர் - சார்டீனியா
மக்கள் தொகை - 1,700,000
பயன்பாட்டு மொழி - இத்தாலி, சார்டீனியா

இது இணையத்தில் சுட்ட படம்..:-)
இயற்கையின் அழகு.
தூய்மையான கடற்கறைகள் தான் இந்த தீவிற்கு அதிகமான ஐரோப்பிய சுற்றுப் பயணிகளை கவர்கின்றன.
கால்கியரி (காலியரி என்று சொல்ல வேண்டும்) - இந்த தீவின் தலைநகரின் மையப் பகுதி.
நகரின் மத்தியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையங்கள்.
எலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூனை. அதிசயம் தானே!
எலியோடு சேர்ந்து பூனையும் உணவு உண்ணும் காட்சி. (இது பயிற்சி அளிக்கப்பட்ட பூணை தான்.)
பெக்கரீனோ மற்றும் பியோரே சார்டோ சீஸ் வகைகள் இந்த தீவின் சிறப்பு.
லீவ் மரங்களில் லீவ் காய்கள். இந்த தீவு முழுவதும் எல்லா இடங்களிலும் லீவ் மரங்கள் செழித்து வளர்வதை காணலாம்.
லீவ், லீவ் எண்ணெய் மற்றும் உள்நாட்டு வைன். சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வதற்காக.
இந்த தீவின் பழங்குடியினர் நூராகியர்கள். கி.மு.1800லிருந்து கி.மு 500 இந்த மக்களின் நாகரிகம் இந்த தீவில் செழிப்பாக இருந்துள்ளது. அதன் சில சுவடுகள் இப்போதும் இந்த தீவின் பல இடங்களில் அகழ்வாராய்ச்சியின் வழி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படம் ' சு நுராசியி' கிராமத்தைக் காட்டுவது. இங்கே #39;ரு அகழ்வாராய்ச்சி நிலையமும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பல தடயங்களும் தொல் பொருள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சி நிலைய அதிகாரி விளக்கம் தருகின்றார். பின் புறத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட #39;ரு கோட்டையின் சில பகுதிகள். இந்த அதிகாரி நான் அடிப்படையில் மலேசிய நாட்டைச் சேந்த்தவர் என்று தெரிந்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டார். குறிப்பாக இந்த அகழ்வாராய்ச்சி நிலையத்திற்கு வருகை புரியும் முதல் மலேசியர் நான் என்று கூறி மகிழ்ந்தார். எனக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
மேலேயுள்ள இந்த வகை சிறிய குட்டி வாகனங்கள் இங்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இவை 3 சக்கரங்களைக் கொண்டவை. பொதுவாக பச்சை மற்றும் நீல நிறத்திலும் #39;ரு சில இப்படி பல வர்ணங்களிலும் உள்ளன.
இந்த தீவில் முக்கிய உணவு பீஸாவும் கடல் உணவுகளும் தான். எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் pizzaria உணவு அங்காடிகள். தொடர்ந்து சில நாட்கலள் பீஸா சாப்பிட்டதில் அடுத்த #39;ரு மாதத்திற்கு பீஸாவைப் பற்றி நினைக்கக் கூடாது என்றே முடிவெடுத்துவிட்டேன்.
தலைநகரின் #39;ரு முக்கிய சாலையில் உள்ள உடைந்த சாலை விளக்கு. ம்ம்ம்.. இங்கேயும் இப்படிச் சில அசம்பாவிதங்கள் !
இங்கு கத்தரிக்காய்கள் நிறையவே கிடைக்கின்றன. அதிலும் பெரிய மாங்காய் அளவில் சில கத்தரிக்காய்கள்.
இந்த தீவின் சீதோஷ்ணத்திற்கு காக்டஸ் செடிகள் நன்றாக வளர்கின்றன. காக்டஸ் மரத்தில் இவ்வளவு அதிகமாக காய்கள் காய்ப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை. கனேரியத் தீவுகளில் பல வகையான காக்டஸ் பூக்களைப் பார்க்கலாம். ஆனால் இங்கு இந்த காய்கள் ஆச்சரியமாக மிக அதிகமாக வளர்கின்றன. இந்த காகய்களை இந்த தீவு மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த காய்களை பறிப்பதற்காக நீண்ட #39;ரு கருவி இருக்கின்றது. இதனைக் கொண்டு இந்த செடியை தீண்டாமலேயே அவர்கள் பரித்துப் பழங்களை வெட்டி அதன் உள்ளிருக்கும் பகுதியை சாப்பிடுகின்றார்கள்.
இவை மிருகக்கட்சிசாலையில் உள்ள பிளாமிங்கோக்கள் அல்ல. சாலை ரத்தில் வாய்க்கால்களில், ஏரிக்களில் #39;ற்றைக் காலில் நிற்கும் சுதந்திரப் பறவைகள்.
Published at 11:10 pm by ksuba
Saturday, January 29, 2005
6 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. கணினியில் பழைய கோப்புக்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்தது. நாமும் கூட இந்த கவிதை எழுதும் விஷப் பரீட்சையெல்லாம் செய்திருக்கின்றோமே என்று நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இந்த ஆச்சரியம் இங்கே பதிவு காண்கின்றது.
மனம் அழுகிறது
ஏன்
என் சிற்றறிவிற்குத் காரணம் தெரியவில்லை
என்றுதான் எனக்கு தெரிந்தது
புரியாத புதிர்
வாழ்க்கையே போராட்டம்
ஏன்
எதற்கு
எதை சாதிக்க?
அறிவின் எல்லையை தாண்டி
என்னையும் என் சுயத்தையும் மீறி
யாதோ ஒன்று சொல்கிறது
கடமையைச் செய்
யாமிருக்க பயமேன்!
சுபா 20/03/1999
Published at 02:11 pm by ksuba
Friday, January 28, 2005
தமிழ்த்திணை - இணைய ஆய்விதழ்
நான் தமிழகத்திற்கு 2003ம் ஆண்டில் சென்றிருந்த போது பாரதிதாசன் பலகலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ராதா செல்லப்பன் அவர்கள் என்னை சிறப்பு சொற்பொழிவு வழங்கச் சொல்லி திருச்சிக்கு அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவம் மனதிற்கு நிறைவைத் தருகின்ற ஒரு விஷயமாக அமைந்து விட்டது. பல ஆர்வமிக்க மாணவர்களை சந்தித்து உறையாடும் வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமில்லாது பேராசியர்களோடு தமிழ் மற்றும் கணினி வளர்ச்சி பற்றி சம்பாஷிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன் தொடர்பாக எனக்கு ஏற்பட்ட மின்னுலக நண்பர்களில் முனைவர் நெடுஞ்செழியனும் ஒருவர். அவர் புத்தாண்டு நேரத்தில் எனக்கு அனுப்பியிருந்த செய்தி எனக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியது. அந்த அறிய செய்தியை எனது வலைப்பதிவைப் படிக்கும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. முனைவர் நெடுஞ்செழியனும் அவரது நண்பர்களும் தங்களின் அறிய முயற்சியாக தமிழில் வலைப்பக்கம் ஒன்றினை உருவாக்கியிருக்கின்றார்கள். இந்த வலைப்பக்கத்தின் சிறப்பு இது ஒரு ஆய்வு ஆராய்ச்சி இதழாக வெளிவந்திருப்பதுதான்.
ஆங்கிலத்தில் இணையத்தில் எத்தனையோ ஆய்வு இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தரம் வாய்ந்த பலகலைக்கழக ஆய்வு அறிக்கைகளைக் கொண்ட தமிழ் இணைய ஆய்விதழ்கள் எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை. (இருந்தால் வாசகர்கள் சுட்டிக் காட்டலாம்.) இந்தக் குறைய நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ஆய்விதழ் தற்போது வெளிவந்திருக்கின்றது என்றே சொல்லலாம். இந்த வலைப்பக்கத்தைப் பார்த்து வியந்து மகிழ்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். முதற்பக்கமே மிகத்தெளிவாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பக்கம் இப்போதுதான் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது. அதில் குறிப்பாக தமிழாய்வுகள் எனும் பகுதியில் இருக்கும் பட்டியல் தமிழ் துறை ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒன்று. மேலும் பற்பல பல்கலைக்கழகங்களிலிருந்து ஆய்வு விபரப்பட்டியல் வருங்காலத்தில் இப்பகுதியில் சேர்க்கப்படும் போது உலகளாவிய அளவில் இந்த வலைப்பக்கம் தமிழ் துறை ஆய்வாளர்களுக்குப் சிறந்த முறையில் பயனளிக்க முடியும்.
இந்த வலைப்பக்கத்தைக் காண "தமிழ்த்திணை" பகுதிக்கு செல்லுங்கள். இந்த முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று. இதனை அனைவரும் வாழ்த்தி வரவேற்போம்.
Published at 12:30 am by ksuba
Thursday, January 20, 2005
Travelog - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part V
1972ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டு மூன்ஷன் நகரத்தில் நடைபெற்றது. அதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு மையத்தைக் காண காலையிலேயே நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டோம். இந்த ஒலிம்பிக் விளையாட்டு மையத்தின் பக்கத்தில் தான் மூன்ஷனின் தொலைகாட்சி கோபுரம் இருக்கின்றது. முதலில் கோபுரத்திற்குச் சென்று பின்னர் விளையாட்டு மையத்தை பார்வையிடுவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.
தொலைகாட்சி கோபுரத்தின் மேலே செல்லுவதற்கு கட்டணம் தேவை. (மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தின் மேலே செல்வதற்குக் கூட காசு கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் நுழைவுக் கட்டணம் கட்டாயம்) கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏறக்குறைய மூன்ஷன் நகரம் முழுவதும் தெரிகிறது. BMW கார் நிறுவனத்தின் தலைமையகம் அருகாமையிலயே உள்ளது. அதன் அருகிலேயே BMW Musuem இருக்கின்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. தாலைகாட்சி கோபுரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து பார்த்தால் ஒலிம்பியா பார்க் காட்சியளிக்கின்றது. விளையாட்டு மைதானம், அதனைச் சேர்ந்தார் போல உள்ள ஆறு, பூங்கா ஆகியவை மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.
1972ல் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வோடு சேர்ந்தார்போல நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை பலரும் ஞாபகம் வைத்திருக்கக் கூடும். ஆகஸ்டு 26ம் நாள் தொடங்கப்பட்ட விளையாட்டுக்கள் சீராக 10 நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் செப்டம்பர் 5ம் தேதி காலையில் 8 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்களுக்காக அருகிலேயே அமைக்க ப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்திற்குள் புகுந்து 2 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்று விட்டு மேலும் 9 பேரை பிணையாக பிடித்துக் கொண்டு சென்று பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஒலிம்பிக் விளையாட்டு உடனே நிறுத்தப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு.
இந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானப் பகுதி தற்போது உலகளாவிய அளவில் பல நிகழ்வுகள் நடத்துவதற்காகப் பயன்படுகின்றது. ஓய்வு நேர கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபாடு உடையவர்கள் பலர் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்ஷன் நகரம் இருக்கின்ற பாயர்ன் மாநிலம், ஜெர்மனியின் ஏனைய மாநிலங்களை விட பணக்கார மாநிலமாக கருதப்படுகின்றது. இங்கு வெளிநாட்டவர்களும் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் இது ஒரு வர்த்தக மையமாக இருப்பதுதான். இங்கு பொதுமக்கள் பரவலாக சுயமாக வாகனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இரயில், அதிவேக இரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாலும், கார் வைப்பதற்கான இடவசதி என்பது மிகப் பெரிய பிரச்சனை என்பதாலும் மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களை விரும்புகின்றார்கள். வர்த்தக மையமாக இருப்பதால் மற்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு இங்கு பஞ்சமாக இருக்குமோ என்றல் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அழகழகான பூங்காக்கள், பிரமிக்க வைக்கும் வர்த்தக மையங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள், தொல்பொருள் காட்சி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா, வகை வகையான உணவகங்கள் என்று பல வகையில் திருப்தியளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நகரம் தான் இது.
மாலை மூன்ஷன் நகரிலிருந்து ஸ்டுட்கார் திரும்பும் போது இந்த நகரை சுற்றிப் பார்க்க நிச்சயமாக 4 நாட்கள் போதாது என்பதை உணர்ந்தோம். இந்த பயணம் இனிமையான நினைவலைகளை எனக்குள் ஏற்படுத்தி என்னை மகிழவைத்தது.
Published at 11:19 pm by ksuba
Wednesday, January 19, 2005
Travelog - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part IV
சனிக்கிழமை காலையிலேயே ப்ரெட்ஸல் சகிதமாக காலை உணவை முடித்து நாங்கள் மூன்ஷன் நகரின் புறநகர் பகுதியான அம்மர்சீ (Ammersee) ஏரிப் பகுதிக்கு புறப்பட்டோ ம். மூன்ஷன் மையப்பகுதியிலிருந்து விரைவு இரயிலில் இந்த இடத்தை 45 நிமிடத்தில்
அடைந்து விடமுடியும். அம்மர்சீ அதன் இயற்கை அழகுக்கு மாத்திரம் புகழ் பெற்ற ஒன்றில்லை. sailing பயிற்சி பள்ளிகள் பல இங்கு இருக்கின்றன. இங்குதான் ஜெர்மனியில் மிகப் பழமையான sailing பள்ளி இருக்கின்றது. இந்த ஏரியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. கடலைப் பார்ப்பது போல நீண்டு பரவி இருக்கின்றது அம்மர்சீ.
அம்மர்சீக்கு அருகாமையில் மலையுச்சியில் மிகப்பழமை வாய்ந்த பாரோக் வடிவமைப்பிலான ஒரு தேவாலயம் இருக்கின்றது. ஜெர்மனியில் இருக்கின்ற திருத்தல யாத்திரைப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. (ஹிந்து சமயத்தில் உள்ளது போன்றே ஜெர்மனியிலும் தீர்த்த யாத்திரை செய்யும் பழக்கம் வழக்கத்தில் இருக்கின்றது. இதனை பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிட முயற்சிக்கிறேன்) இந்த தேவாலயத்தை அடைவதற்கு மலையை நோக்கி ஏறக்குறைய 1மணி நேரமாவது நடக்க வண்டும். வழியில் பற்பல முக்கிய இடங்களும் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்வதென்றால் நடுவழியில் இருக்கின்ற தேவாலய குருமார்களின் மடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பழமை வாய்ந்த கட்டிடம்; மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கின்றது. முன்பெல்லாம் குருமார்கள் மற்றும் சமய ஆர்வலர்களை மட்டுமே கவர்ந்து வந்த இந்த மலைப் பிரதேசம் இப்போது ஹைக்கிங்
செய்பவர்களுக்குப் பிடித்த பகுதியாக விளங்குகின்றது. ஏரிக்கரையில் நீந்திக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்த வாத்துக்களை பார்த்துக் கொண்டே மலையுச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
மலைப்பிரதேசத்தில் இந்த குளிர் காலத்தில் நடப்பது சுலபமான ஒரு விஷயமல்ல என்பதை நடக்க நடக்க தெரிந்து கொண்டன். காய்ந்த சருகுகள் தரையெல்லாம் கொட்டிக் கிடப்பதாலும் சில நாட்களுக்கு முன் பெய்த பணி இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருந்ததாலும் பாதை சில நேரங்களில் வழுக்கிக் கொண்டேயிருந்தது. கொஞ்சம் கவனம் குறைந்தாலும் கீழே விழுந்து விடுவேம். இந்த பயம் இருந்தாலும் மலையின் இயற்கை அழகு மனதை கொள்ளை கொள்வதாகவே இருந்தது. இப்படியே நடந்து குருமார்களின் மடத்தைக் கடந்து ஒரு வழியாக மலையுச்சியில் இருக்கும் தேவாலயத்தை அடைந்தோம்.
அளவில் கொஞ்சம் சிறியதாக இருந்தாலும், தேவாலயத்தின் உட்புறம் மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்வையாளர்கள் இருந்தாலும் நிசப்தமாக தியான சிந்தையை தூண்டும் வகையில் அமைதியாக இருந்தது. தேவாலயம் தூய்நமயாக பாதுகாக்கப்படுகின்றது. இதனைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருக்கும் நமது பழமை வாய்ந்த ஆலயங்களும் இப்படி தூய்மையாக, அமைதி நிலவும் வகையில் பாதுக்காக்கப்பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்
டன்.
Published at 11:24 pm by ksuba
Tuesday, January 18, 2005
Travelog - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part III
ஜெர்மனியில் செல்லுமிடமெல்லாம் சைவ உணவு வகைகளுக்கு கொஞ்சமும் பிரச்சனையேயில்லை. அதற்காக தோசை இட்லி சாம்பாரெல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு மாற்றாக உருளைக் கிழங்கிலும் பச்சை காய்கறிகளிலும் தங்கள் கை வரிசையைக் காட்டுபவர்கள் ஜெர்மானியர்கள். நான் இருக்கின்ற போப்லிங்கன் நகரம் பாடன் உர்ட்டெம்பெர்க் எனும் மாநிலத்தைச் சார்ந்தது. எப்படி இந்தியாவில் தமிழகத்திற்கு கேரளாவிற்கு ஆந்திராவிற்கு என்று தனித்தனியாக சிறந்த உணவு வகைகள் இருக்கின்றதோ அதேபோல ஜெர்மனியிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஷ்பெஷல் உணவு வகை உண்டு. உணவு வகைகளில் சிறந்ததாக இந்த பாடன் உர்ட்டெம்பெர்க் மற்றும் முன்ஷன் நகரம் இருக்கும் பாயர்ன்(Bavaria) மாநிலமும் கருதப்படுகின்றன. இதில் என்ன வித்தியாசம் என்றால், பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் இத்தாலிய சைவ உணவுகளோடு இந்த மாநிலத்திற்கு உரியதான பல சைவ உணவு வகைகளையும் எல்லா உணவு விடுதிகளிலும் பெற்று விட முடியும். ஆனால் பாயர்ன் மாநிலம் அசைவப் பிரியர்களுக்கு அதிகமான வகைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது.

பொரித்த பன்றி இறைச்சி, கொஞ்சம் பச்சை காய்கறிகள், மற்றும் உள்நாட்டு பியர் இங்கு மிகப் பரவலாக எல்லா உணவகங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அதோடு சால்மன் மீன், வைன், இவற்றோடு காய்கறிகள் கொண்ட ஒரு வகை உணவும் உண்டு. பன்றி மாடு, கோழி, வான்கோழி இறைச்சி வகைகளில் பல வகையான உணவுகளை இங்குள்ள உணவகங்கள் வழங்குகின்றன. மீன் வகைகள் கொஞ்சம் ஷ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.
பாயர்ன் மாநிலத்தின் புகழ் கூறும் மற்றொரு உணவு வகை ப்ரெட்ஸல் என அழைக்கப்படும் ஒரு வகை ரொட்டி. இது இந்த மாநிலத்தில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜெர்மானியர்கள் கூறுகின்றார்கள். ஜெர்மனியின் எல்லா இடங்களிலும் இந்த வகை ரொட்டி கிடைத்தாலும், இதன் மிகச் சுவையான இந்த ரொட்டியை பாயர்னிலும் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் தான் பெற முடியும். முதன் முதலில் இந்த ரொட்டியைச் சாப்பிடுபர்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் காட்டுவதால் இது பிடிக்காமல் போய்விடக் கூடும். ஆனால் பழகி விட்டால் ப்ரெட்ஸல் இல்லாமல் காலை உணவே இல்லை என சொல்லும் அளவிற்கு பழகி விடுவோம். இந்த ரொட்டியில் உள்ள சிறப்பு அதன் மேலே பூசப்படும் ஒரு விதமான பொருள் தான். இதன் சுவை கொஞ்சம் துவர்ப்பாகவும் இருக்கும். ரொட்டியின் மேல் உப்புத் துகள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பட்டர் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவையே தனிதான்.

சாதரணமாக சிறிய அளவில் ஜெர்மனி முழுதும் கிடைக்கக்கூடிய இந்த ப்ரெட்ஸல், அக்டோ பர் மாதம் மட்டும் மூன்ஷன் நகரில் ஒரு பெரிய பீஸா அளவிற்கு கடைகளில் கிடைக்கும். இந்த பெரிய ப்ரெட்ஸலை ஒருவரால் நிச்சயமாக சாப்பிட்டு முடிக்க முடியாது.
மூன்ஷன் வந்திருப்பதால் இந்த நகரத்தின் ஸ்பெஷல் தான் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து மெனு அட்டையில் எனக்குப் பிடித்த உணவைத் தேடினேன். ஒரு சைவ உணவு அகப்பட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் எனது உணவு வந்து சேர்ந்தது. பெரிய அளவிலான ஒரு உருளைக் கிழங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு வேகவைத்து வருக்கப்பட்டு அதோடு காய்கறிகளை சோயா சோஸ் சேர்ந்து மெலிதாக வருத்து வைத்திருந்தார்கள். உணவை சுவைக்க ஆரம்பித்தோம். சுவை பிரமாதம்.
Published at 09:04 pm by ksuba
Friday, January 14, 2005
Travelog - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part II

மூன்ஷன் நகர மத்தியிலேயே அமைந்திருக்கும் பெரிய பூங்கா இந்த இங்லீஷ் கார்டன். சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை பசேலென்று அமைந்திருக்கும் இந்த பூங்கா அதன் தனித்துவத்தால் வருவோரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இங்குள்ள சீனக் கோபுரம், ஏரி, அதில் அழகாக மிதந்து வரும் அன்னப்பறவைகள், விதம் விதமன வாத்துக்கள் போன்றவை இந்த பூங்காவின் அழகை மேலும் ரசிக்க வைக்கின்றன. கோடை காலத்தில் இந்த பூங்காவிற்கு மேலும் ஒரு சிறப்பு அம்சம் ஒன்றும் இருக்கின்றது. இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் கோடையில் நிர்வாண
சூரியக் குளியல் செய்வதற்காக மக்கள் கூடுவதும் வழக்கம். நகரின் மையப் பகுதியான ஓடன்ப்லாட்ஸ் பகுதியிலிருந்து மூன்ஷன் நகர தெற்கு எல்லை வரை இந்த பூங்கா நீண்டு அமைந்திருக்கின்றது. செல்ல செல்ல இந்த பூங்கா விரிவாகிக் கொண்டே வருகின்றது; மாலைப் பொழுதை இயற்கையோடு கலந்து அனுபவிப்பதற்கு சிறந்த இடம் இந்தப் பூங்கா. ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய பூங்காவாக இந்த இங்லீஷ் கார்டன் அமைந்துள்ளது.
ஐரோப்பிய நகரான இந்த மூன்ஷனில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆசியாவின் கலை நுனுக்கத்தை எடுத்துக் காட்டும் குறிப்பிடத்தக்க ஒரு இடமும் இருக்கின்றது. "Haus der Kunst" என்றழைக்கப்படும் கலைக்கூடத்தின் பக்கத்தில்
அழகான ஒரு ஜப்பானிய உணவகம் அமைந்துள்ளது. Mitsuo Normura என்ற ஜப்பானியர் ஒருவர் தான் இந்த உணவகத்தை ஒலிம்பிக் விளையாட்டு இந்த நகரில் 1972ல் நடந்த பொழுது கட்டினாராம். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாதத்தின் 2ம் மற்றும் 4ம் வார இறுதி நாட்களில் மதியம் 3லிருந்து 5 வரை தேநீர்
அருந்தும் வைபவம் இங்கு நடைபெறுமாம். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது என்ன விஷயம் என்பது தெரியவில்லை. இந்த உணவகத்திற்குப் பக்கத்திலேயே அமைந்திருக்கின்றது கண்ணைக் கவரும் வகையில் கட்டப்ப
ட்டுள்ள சீன கோபுரம். மூன்ஷன் நகரத்திலேயே பிரபலமாக wildest beer garden in Munich என அழைக்கப்படும் பகுதி இது. கோடை காலத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம் நாங்கள் சென்றிருந்த அந்த மாலை வேளையில் விண்டர் குளிர் காரணத்தால் ஆட்கள் யாருமின்றி அமைதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
கோடைகாலத்தில் பெரும்பாலும் சூரிய வெளிச்சம் இரவு 10 மணி வரை இருக்கும்; அப்போது இந்த திறந்த மண்டபமான இந்த சீன கோபுரத்தில் மட்டும் 7000 பேர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகளை அமைத்திருப்பார்களாம்.
இதனைத் தாண்டி வரும் வழியில் பழங்கால அரசவை மண்டபங்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும்
மானோபெறோஸ் மண்டபம் அமைந்திருக்கின்றது. இதன் மேலே சென்று பார்த்தால் மூன்ஷன் நகரத்தின் பெரும்பாலான
முக்கிய நினைவுச் சின்னங்களையெல்லாம் பார்த்து விட முடிகின்றது. இந்த மண்டபம் இசை பிரியர்களுக்கு உகந்த
இடம் போலத் தெரிகின்றது. பல இனத்தைச் சார்த்த மக்களும் அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகளை இசை
த்துக் கொண்டு (தரையில் சிறிய பெட்டி அல்லது தொப்பியை வைத்து விடுகிறார்கள், காசுக்காகத்தான்) வருவோரை இசையால் மகிழ்விக்கின்றனர். இந்திய உருவச் சாயலுடன் ஒருவர் ஹார்மோனியம் போன்ற ஒரு இசைக் கருவியை கையில் ஏந்தியவாறு வாசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அங்கிருந்த சமயத்தில், மண்டபத்தின் நுழைவாயிலுக்குச் சற்று தள்ளி ஜெர்மானியர் ஒருவர் புல்லாங்குழல் போன்ற ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த திருப்தியுடனும், நடந்த களைப்பினாலும் அங்கிருந்த ஒரு ஜெர்மானிய பாரம்பரிய உணவு விடுதியில் இரவு/மாலை உணவுக்காக நுழைந்தோம்.
Published at 12:19 am by ksuba
Thursday, January 13, 2005
Travelog - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part I

வலைப்பக்கத்தில் எனது பயணக் கட்டுரைகளை எழுதி நெடுநாட்களாகி விட்டன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எதிர் பாராத விதமாக உள்நாட்டிலேயே சிறிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அன்றாட அலுவலக வேலைகள், அலைச்சல்கள், இவைகளுக்கு மத்தியில் 4 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஜெர்மனியின் தெற்கு மாநிலமன பாயர்னில்(Bayern) உள்ள மூன்ஷன் (Muenchen) நகரத்திற்கு கடந்த வாரம் சென்று வந்திருந்தேன். பொதுவாகவே விண்டர் குளிரில் நான் அதிகமாக ஜெர்மனியில் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிப்பது அரிது. பெரும்பாலும் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவதே வழக்கமாகிவிட்ட சூழ்நிலையில் இந்த முறை இந்த சிறிய திடீர் பயணம் சற்று வித்தியாசமாகவே அமைந்திருந்தது.
ஸ்டுட்கார்ட்(Stuttgart) நகரத்திலிருந்து மூன்ஷன் நகரை காரில் சென்று அடைவதற்கு இரண்டரை மணி நேரம் போதும். கார் மட்டுமின்றி இரயில் வழியாகவும் மற்றும் விமானம் வழியாகவும் இந்த நகரை அடைய முடியும். பவேரியன் நகரமன இந்த நகரம் தெற்கு ஜெர்மனியின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த நகரின் சிறப்பு அம்சங்கள் இங்கு தயாரிக்கப்படும் பியர்களும், பழமையையும் நாகரிக வளர்ச்சியையும் காட்டும் பிரமாண்டமான கட்டிடங்களும், இயற்கை அழகுமகும். இந்த நகரின் சிறப்பைக் கூறும் பிரமாண்டமான சில தொல்பொருள் ஆய்வு கூடங்களும் இங்கு அமைந்திருக்கின்றன. இதற்கும் மேலாக பவேரியா ஆல்ப்ஸ் (Baverian Alps) மலைத்தொடரின் வாயிலாக அமைந்திருப்பதால், குளிர்கால விளையாட்டுக்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாகவும் இந்த நகரம் விளங்குகின்றது.

மூன்ஷன் நகரம் 1158ம் ஆண்டில் ஐசார் நதிக்கரையில்(River Isar) உருவாக்கப்பட்டது. மூன்ஷன் என்னும் பெயர் துறவிகளின் இல்லம் என்பதைக் குறிப்பது. துறவிகள் தான் இங்கு பியர் தயாரிக்கும் துறையை வளார்த்ததாக இந்தகரைப் பற்றி விளக்கும் கையேடுகள் கூறுகின்றன.
இப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் தொடக்கி வைத்த இந்த தொழில் இன்று இந்த நகரின் புகழை உலகம் முழுவதும் பரவியிருக்கச் செய்துள்ளது. 1810ம் ஆண்டில் தான் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நகரில் நடைபெறும் அக்டோ பர் திருவிழா(October Fest) ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகெங்கிலுமிருந்து 6 மில்லியன் மக்கள் இங்கு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவின் போது ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் லிட்டர் பியர்கள் பயன்படுத்தப்படுவதாக (விற்று முடிவதாக) மூன்ஷன் வலைப்பக்கம் தெரிவிக்கின்றது.
இந்த நகருக்கு நான் இரண்டு முறை ஏற்கனவே அலுவலக விஷயமாக வந்திருந்தாலும், இம்முறை விடுமுறை என்பதால் சுதந்திரமாக சில இடங்களை சுற்றி வர முடிந்தது. குளிர் காலம் என்றாலும் இங்கிருந்த நான்கு நாட்களுமே ஏறக்குறைய 6லிருந்து 11 டிகிரி வரை சீதோஷ்ணம் இருந்ததால் வெளியில் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கு சிரமமாக இல்லை. மேக மூட்டமின்றி சூரிய வெளிச்சம் நிறைந்திருந்ததால், சந்தோஷமாக நகர் வலம் வரமுடிந்தது.
மூன்ஷனில் பல முக்கிய இடங்கள் இருந்தாலும், முதலில் எங்கள் பட்டியலில் இருந்தது இங்குள்ள அழகிய பூங்காவான இங்லீஸ்ஷ் கார்டந் தான். அதனை பார்த்து ரசிக்க மதியம் கிளம்பினோம்.
Published at 12:21 am by ksuba
Tuesday, December 28, 2004
Sila Nerangkalil Sila Manithargal - Jayakanthan
நாவல்: சில நேரங்களில் சில மனிதர்கள்
நாவலாசிரியர்: ஜெயகாந்தன்
இந்திய அரசின் பெறுமை மிகுந்த பரிசான சாகித்திய அகாதமி பரிசு பெற்ற, இந்த நாவல் தொடர்கதையாக வெளிவந்த காலத்திலும் சரி, பின்னர் புத்தகமாக வெளிவந்த பிறகும், அதற்கு பின்னர் திரைப்படமாக வெளிவந்த பிறகும் மிகுந்த சர்ச்சையை உருவாக்கிய, இன்றளவும் உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நாவல் இது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இதனை வாசித்த ஞாபகம் உண்டு; திரைப்படத்தை பார்த்ததில்லை; நாவலை மீண்டும் வாசிப்போமே என்று நினைத்து இதனை இணையத்தின் வழி அண்மையில் வாங்கியிருந்தேன்.
இந்த நாவலின் முதல் பதிப்பு 1970ல் வெளிவந்து இப்போது நான் வாங்கியிருக்கும் இந்த வெள்ளைத்தால் பதினாறம் பதிப்பு வரை மறுபதிப்பு கண்டிருக்கும் இந்த நாவல் வியாபார அடிப்படையிலும் வெற்றிகண்டிருக்கின்றது. விலை ரூ100. தினமணிக் கதிரில் காலங்கள் மாறும் என்ற தலைப்பில் தொடராக இந்த நாவல் வெளிவந்து பின்னரே புதுப் பெயருக்கு மாற்றம் கண்டிருக்கின்றது.
நாவலின் ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் சமுதாயத்தின் மேல் தனக்கிருக்கும் நிலைப்பாட்டை கதைக்கு முன்னுரை தருவது போல விளக்கிவிடுகின்றார்.
மனிதர்களை அதிலும் பெண்களுக்கு புனித நிலையை வழங்கி புனிதத்தன்மையோடு பார்க்க விரும்பும் தமிழ் (இந்திய) வாகர்களுக்கு /பிரியர்களுக்கு மனிதர்கள் இப்படியும் இருக்கின்றார்கள் என்று நிதர்சன வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை இந்த நாவல் காட்டி அவர்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. மனித வாழ்க்கை புராணக் கதைகளில் வருகின்ற நாயகன் நாயக இலக்கணத்திற்கு உட்பட்ட ideal நிலைப்பாட்டுடன் அமைவதில்லை. வெளியே சிரித்துப் பேசிக்கொண்டு பற்பல விதமான முகமூடிகளைத் தேவைக்கேற்ப அணிந்து கொண்டிருக்கும் நம் எல்லோருக்குமே ஒரு தனிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அதில் அழகும் இருக்கின்றது; அசிங்கமும் இருக்கின்றது. வாழ்க்கை இப்படி அமைந்தால் நன்றாக இருக்குமே என கணவு காண முடியும்; அதற்கான முயற்சிகளில் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற முடியும்; ஆனால் இப்படித்தான் அமைந்திருக்க வேண்டும் என்று சட்டம் போடுவது அபத்தம். ஒருவருக்கு சரியான ஒரு நியாயம் மற்றவருக்கு வேறுபட்ட நிலைப்பாட்டை கொடுக்க முடியும். ஒரு நாட்டு மக்களுக்கு சரியாகப் படுகின்ற ஒரு நீதி மற்ற இன மக்களுக்கு வேடிக்கையான அல்லது ஒவ்வாத ஒரு விஷயமாகப் படலாம்.
ஆக இப்படி வேறுபட்ட நிலையிலான பல்வேறு மக்களுடன் நாம் ஒவ்வொரு கணமும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நாவல் காட்டுகின்ற பிரச்சனை ஒரு தனி ரகம்.
நாவலின் முடிவு மனதை வேதனையுடன் பிசைந்தாலும் உண்மையை உண்மையாகப் பார்க்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் போடுகின்ற கட்டளை கொஞ்சம் உதவுகின்றது.
இந்த நாவல் முழுவதுமே உளவியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட உண்மை சம்பவம் போல தோன்றுகின்றது. படிக்கின்ற ஒவ்வொரு வாசகரின் மன நிலை, பக்குவ முதிர்ச்சி, அடிப்படை, இதனைப் பொறுத்து வேறுபட்ட சலனங்களை வாசகர்களுக்கு இந்த கதை கொடுத்திருக்கின்றது என்பதை ஜெயகாந்தனின் முன்னுரையிலேயே தெரிந்து கொள்ள முடிகின்றது.
"ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பும் அல்லது அசட்டுத்தனமான அனுதாபமும் கொள்ளுகின்ற வாசகர்கள் இலக்கியத்தின் மூலம் வாழ்வை புரிந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள். இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லாம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா?
என்கின்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் ஆம் என பதில் கூறுகின்றது" என்று இந்த நாவலை முன்வைக்கின்றார் ஜெயகாந்தான்.
அருமையான நாவல்; வாசித்து முடிந்து மூன்று நாட்களாகியும் கங்காவும் பிரபுவும் என் மனதில் அழுது கொண்டுதானிருக்கின்றனர்.
குறிப்பு: ஜெயகாந்தனை அறிந்து கொள்ள...
Published at 08:50 pm by ksuba
Saturday, January 17, 2004
இணையத் தொடர்பு இருப்பதனால் நமக்குக் கிடைக்கின்ற பல நண்மைகளைப் பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதில் மிக முக்கியமாக நான் கருதுவது உறவுகளையும் நண்பர்களையும் நாம் தொடர்பு கொள்ள இணையம் சார்ந்த தொழில் நுட்பம் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புதான். இணையத் தொடர்புகளின் வழி மின்னஞ்சல் வசதிகள் வந்த பிறகு குடும்பத்தாரை விட்டு பிரிந்திருப்பதோ நண்பர்களை விட்டு தூரத்தில் இருப்பதோ மிகப் பெரிய மனக்கவலையாகத் தெரிவதில்லை. அதற்கும் லாக புத்தம் புதிய நண்பர்கள், இதுவரை நாம் முகம் ர்த்திராத நண்பர்கள் நமக்கு அறிமுகமாகி ழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியை நமக்கு அளிப்பதை நினைக்கும் போது இனையத் தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதவாக்கில் சன் தொலைகாட்சியில் ஒரு சிறப்பு அறட்டை அறங்கம் நிகழ்ச்சி வழி அழகி மென்பொருள் உருவாக்கிய விஷியைக் காண முடிந்தது. அப்போது அவரது விடா முயற்சியைப் பாராட்டி நானும் அவரது வலைப்பக்கத்தில் வாழ்த்து அனுப்பியிருந்தேன். இப்போது அவர் வழியாக மனதை நெகிழவைக்கும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ள முடிந்ததை நினைத்து உண்மையில் மகிழ்ச்சியடைறேன்.
அழகி வலைப்பக்கத்தில் ஒரு பகுதியில் ஜனா என்ற 13 வயது சிறுவனைப் பற்றிய ஒரு சிறப்புப் பக்கத்தையே விஷி உருவாக்கியிருக்கின்றார். ஒரு சிறுவனுக்கு முழு வலைப்பக்கமே உருவாகியிருக்கின்றது என்றால் நிச்சயமாக அவன் ஒரு அசாதாரணமான ஒரு சிறுவனாகத்தானே இருக்க முடியும்! ஆமாம்! நிச்சயமக அவன் ஒரு அசாதாரணமான ஒரு சிறுவன் தான்!
இங்கு ஜெர்மனியிலுள்ள எனது இலங்கைத் தமிழ் நண்பருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு பேசுவதால் வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கலாமே என ஆரம்பித்த எனக்கு அவரது அழுகை தோய்ந்த குரலைக் கேட்டு அதிர்ச்சியாகிட்டது. அவரது 17 வயது மகன் பள்ளி விடுமுறையில் வேலைக்குச் சென்றவன், தவறுதலாக பலகை வெட்டும் இயந்திரத்தில் கையைவிட்டதால் விரல்களை இழந்திருக்கின்றான். 28 மணிநேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு துண்டாகிப் போன 4 விரல்களில் 3 விரல்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக இணைத்திருக்கின்றனர். இருந்தும் சுட்டு விரலை நாழி கடந்ததால் இணைக்க முடியவில்லை. இளைஞனான அவனுக்கு இப்போது மன அமைதிக்கு ஆறுதல் வார்த்தைகள் தான் மருந்து என்று நேற்று வருத்தத்தோடு தெரிவித்துக் கொண்டிருந்தனர் அவனது அன்பான பெற்றோர்கள். இந்த நிகழ்வு மனத்திறையில் இருந்து அகலாத நிலையிலேயே விஷ் மின்னஞ்சலில் எனக்குச் சுட்டிக்காட்டியிருந்த வலைப்பக்கத்திற்குச் சென்று காண்போமே என்று வலைப்பக்கத்தைத் தட்டிய எனக்கு பெரிய ஆச்சரியம்.
மிகப் பெரிய விபத்திற்குப் பிறகு தனது கைகளையும் காலையும் இழந்த நிலையிலிருக்கும் ஜனா கைகள் இல்லாத நிலையிலேயே மிக சிறப்பாக ஓவியம் வரைய ஆரம்பித்திருக்கின்றான். அவனது ஆர்வம் பள்ளியளவில் நின்றுவிடவில்லை. மாறாக பற்பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளையும் தட்டிச் சென்றிருக்கின்றான் ஜனா.
உடல் ஊணம் கணினி தொழில் நுட்பத்தில் ஈடுபடுவதற்கு நிச்சயமாகத் தடையாக இருக்கக் கூடாது. தாளிலும் பென்சிலும் வர்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனா கணினியிலும் மென்பொருட்களைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்க முடியும் என்பதை இந்த வலைப்பக்கம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றது. இம்மாதிரியான முயற்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும்.
ஜனாவைப் பற்றிய மேலும் பல தகவல்கள், அவனது வெற்றிப் பட்டியல், அவனது ஓவியங்கள் இப்படிப் பல விஷயங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன ( http://www.azhagi.com/jana/ ). அனைவரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு பகுதிதான் இது. வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததுதான். அந்தப் போராட்டங்களை மனிதர்கள் நாம் எப்படி எதிர்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியின் அளவு அடங்கியிருக்கின்றது. அந்த வகையில் ஜனா ஒரு வெற்றியாளர் தான். அவன் மேலும் மேலும் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் வெறும் வாழ்த்துகள் மட்டும் போதாது. மாறாக கணினி, மற்றும் இணையகல்வி அறிமுகங்கள் அவனுக்குக் கிடைக்க உலகத் தமிழர்கள் நாம் நிச்சயமாக உதவவேண்டும் என்று நினைக்கின்றேன்.
[ Thanks http://www.azhagi.com ]
Published at 09:26 pm by ksuba
|
 |
 |
 |
 |
 |
 |
|
|