|
நாவல்: சில நேரங்களில் சில மனிதர்கள்
நாவலின் ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் சமுதாயத்தின் மேல் தனக்கிருக்கும் நிலைப்பாட்டை கதைக்கு முன்னுரை தருவது போல விளக்கிவிடுகின்றார். மனிதர்களை அதிலும் பெண்களுக்கு புனித நிலையை வழங்கி புனிதத்தன்மையோடு பார்க்க விரும்பும் தமிழ் (இந்திய) வாகர்களுக்கு /பிரியர்களுக்கு மனிதர்கள் இப்படியும் இருக்கின்றார்கள் என்று நிதர்சன வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை இந்த நாவல் காட்டி அவர்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. மனித வாழ்க்கை புராணக் கதைகளில் வருகின்ற நாயகன் நாயக இலக்கணத்திற்கு உட்பட்ட ideal நிலைப்பாட்டுடன் அமைவதில்லை. வெளியே சிரித்துப் பேசிக்கொண்டு பற்பல விதமான முகமூடிகளைத் தேவைக்கேற்ப அணிந்து கொண்டிருக்கும் நம் எல்லோருக்குமே ஒரு தனிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அதில் அழகும் இருக்கின்றது; அசிங்கமும் இருக்கின்றது. வாழ்க்கை இப்படி அமைந்தால் நன்றாக இருக்குமே என கணவு காண முடியும்; அதற்கான முயற்சிகளில் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற முடியும்; ஆனால் இப்படித்தான் அமைந்திருக்க வேண்டும் என்று சட்டம் போடுவது அபத்தம். ஒருவருக்கு சரியான ஒரு நியாயம் மற்றவருக்கு வேறுபட்ட நிலைப்பாட்டை கொடுக்க முடியும். ஒரு நாட்டு மக்களுக்கு சரியாகப் படுகின்ற ஒரு நீதி மற்ற இன மக்களுக்கு வேடிக்கையான அல்லது ஒவ்வாத ஒரு விஷயமாகப் படலாம். நாவலின் முடிவு மனதை வேதனையுடன் பிசைந்தாலும் உண்மையை உண்மையாகப் பார்க்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் போடுகின்ற கட்டளை கொஞ்சம் உதவுகின்றது. இந்த நாவல் முழுவதுமே உளவியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட உண்மை சம்பவம் போல தோன்றுகின்றது. படிக்கின்ற ஒவ்வொரு வாசகரின் மன நிலை, பக்குவ முதிர்ச்சி, அடிப்படை, இதனைப் பொறுத்து வேறுபட்ட சலனங்களை வாசகர்களுக்கு இந்த கதை கொடுத்திருக்கின்றது என்பதை ஜெயகாந்தனின் முன்னுரையிலேயே தெரிந்து கொள்ள முடிகின்றது. "ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பும் அல்லது அசட்டுத்தனமான அனுதாபமும் கொள்ளுகின்ற வாசகர்கள் இலக்கியத்தின் மூலம் வாழ்வை புரிந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள். இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லாம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா? அருமையான நாவல்; வாசித்து முடிந்து மூன்று நாட்களாகியும் கங்காவும் பிரபுவும் என் மனதில் அழுது கொண்டுதானிருக்கின்றனர்.
குறிப்பு: ஜெயகாந்தனை அறிந்து கொள்ள... |
| Leave a Comment: |