|
தொலைகாட்சி கோபுரத்தின் மேலே செல்லுவதற்கு கட்டணம் தேவை. (மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தின் மேலே செல்வதற்குக் கூட காசு கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் நுழைவுக் கட்டணம் கட்டாயம்) கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏறக்குறைய மூன்ஷன் நகரம் முழுவதும் தெரிகிறது. BMW கார் நிறுவனத்தின் தலைமையகம் அருகாமையிலயே உள்ளது. அதன் அருகிலேயே BMW Musuem இருக்கின்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. தாலைகாட்சி கோபுரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து பார்த்தால் ஒலிம்பியா பார்க் காட்சியளிக்கின்றது. விளையாட்டு மைதானம், அதனைச் சேர்ந்தார் போல உள்ள ஆறு, பூங்கா ஆகியவை மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.
ஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்ஷன் நகரம் இருக்கின்ற பாயர்ன் மாநிலம், ஜெர்மனியின் ஏனைய மாநிலங்களை விட பணக்கார மாநிலமாக கருதப்படுகின்றது. இங்கு வெளிநாட்டவர்களும் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் இது ஒரு வர்த்தக மையமாக இருப்பதுதான். இங்கு பொதுமக்கள் பரவலாக சுயமாக வாகனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இரயில், அதிவேக இரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாலும், கார் வைப்பதற்கான இடவசதி என்பது மிகப் பெரிய பிரச்சனை என்பதாலும் மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களை விரும்புகின்றார்கள். வர்த்தக மையமாக இருப்பதால் மற்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு இங்கு பஞ்சமாக இருக்குமோ என்றல் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அழகழகான பூங்காக்கள், பிரமிக்க வைக்கும் வர்த்தக மையங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள், தொல்பொருள் காட்சி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா, வகை வகையான உணவகங்கள் என்று பல வகையில் திருப்தியளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நகரம் தான் இது. மாலை மூன்ஷன் நகரிலிருந்து ஸ்டுட்கார் திரும்பும் போது இந்த நகரை சுற்றிப் பார்க்க நிச்சயமாக 4 நாட்கள் போதாது என்பதை உணர்ந்தோம். இந்த பயணம் இனிமையான நினைவலைகளை எனக்குள் ஏற்படுத்தி என்னை மகிழவைத்தது. |
| Leave a Comment: |